DMK CONGRESS: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் தனது கூட்டணியை பலமாக்கும் பணியை செய்து வரும் திமுக, கூட்டணி கட்சிகள் வைக்கும் நிபந்தனைகளையும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே திமுகவில் அங்கம் வகித்து வரும் விசிக, இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக கூறி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்கள் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம், அதனை ஒதுக்க வேண்டியது திமுகவின் கடமை என்று கூறியிருந்தது. இவ்வாறான நிலையில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. தமிழகத்திலாவது நிலைபெற வேண்டுமென நினைக்கும் காங்கிரஸ், திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேச காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள நிலையில், தற்போது புதிதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் விருப்பம் என்று கூறி ஸ்டாலின் தலையில் இடியை இறக்கியுள்ளார். கூட்டணி என்பது தேர்தல் முடிவும் வரை தான். மற்றபடி ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வர, திமுகவோ அதனை மறுத்து வருகிறது. எனவே விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியதால், காங்கிரஸ் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்படுகிறது.