DMK CONGRESS: 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்களிடம் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் அதில் இதுவரை 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக திமுகவின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மதிப்பீட்டின் படி, திமுக அரசு இதுவரை 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 373 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாதவையாகவே உள்ளன. முக்கியமாக நிறைவேறாத வாக்குறுதிகளில், மாணவர்களுக்கு நீட் தேர்வு நீக்கம், ‘Right to Services Act’ சட்டம் அமல்படுத்தல், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நிலைமையை சீரமைத்தல் போன்றவை அடங்கும்.
இவை அனைத்தும் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் உறுதியளித்த முக்கிய வாக்குறுதிகளாகும். மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல்கள், நிதி பற்றாக்குறை, மற்றும் நிர்வாக தாமதங்கள் ஆகியவை இந்த வாக்குறுதிகள் பலவும் நிறைவேறாததற்கு காரணமாக இருந்ததாக திமுக தலைமை கூறி வருகிறது. இதேவேளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வலியுறுத்தி வருகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து, திமுக மக்கள் நம்பிக்கையை புறக்கணித்து விட்டதாக குற்றஞ்சாட்டுகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுக மீது இது குறித்து கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் செய்தியாளர் சந்திப்பில், இரட்டை குளம் கால்வாய் திட்டம் 50 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வரும் நிலையில், அதனை நிறைவேற்றுவதாக திமுக அரசு தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்து. ஆனால் இது தொடர்பாக எவ்வளவு முயற்சி செய்தும் எந்த பயனும் இல்லை.
இதன் காரணமாக தென்காசியில் எங்கும் என்னால் செல்ல முடியவில்லை, நீயெல்லாம் ஒரு எம்.எல்.ஏ வா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் நானே என் சொந்த செலவில் இதனை நிறைவேற்றி கொள்கிறேன் என்று கூறினார். மேலும் முதல்வர் வாக்குறுதிகளை அளித்துவிட்டு எங்களை ஏமாற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

