கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன.
இந்த சம்பவத்தை அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால் தொடர் மழை காரணமாகவும் இருள் சூழ்ந்ததன் காரணமாகவும் மீட்பு பணி சற்று தாமதமானது.நேற்று வரை 16 பேர் படுகாயங்களுடனும்,42 பேர் சடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோரச் சம்பவம் குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
மூணாறில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தமிழர்கள் பலரும் உயிரிழந்துள்ளனா். இதுதொடா்பாக, கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் பேசினேன். அப்போது, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தேன் என்று தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.