சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த அதிமுக அமைச்சர்!

0
146

அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி என்ற தேசிய கட்சி இருப்பதன் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான் அறிவிப்பார் என்று அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் .அதிமுக இதற்கு முன்னரே தன்னுடைய கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்திருக்கின்ற நிலையிலே, அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்தானது அந்த கட்சியினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருப்பதாக கருதப்படும் நேரத்தில், தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்னெடுக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சென்ற சில மாதங்களுக்கு முன்பாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக அறிவித்தது. இந்த நிலையில் அதனுடைய கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் முருகன் உள்பட அந்தக் கட்சியினர் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருக்கின்ற நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை பாஜகவின் தேசியத் தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்து வந்தனர்.

இது அதிமுக மற்றும் பாஜக என்று இரு கட்சிகளிடையே கருத்து மோதலுக்கு காரணமாக ஆகிவிட்டது. ஆனாலும் அதிமுகவின் அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை பாஜக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறி விடலாம், என்றும் பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள் .ஆனாலும் பாஜகவின் தலைவர்கள் தங்களுடைய கருத்தில் உறுதியாக இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். இது அதிமுக தொண்டர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா கிளினிக்கை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, சென்ற 10 வருடங்களில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற ஒரு மாநிலமாக தமிழக அரசு மாற்றி இருக்கின்றது. தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப் பட்டு வருகின்றது. என்று தெரிவித்தார்.

வழக்கமாக, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளானது சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதுவது மிகமிகத் தவறு. கடந்த 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரு இடங்களில்தான் வெற்றி அடைந்தது. ஆனாலும் சட்டசபையில் அதிமுக ஆட்சி அமைத்தது என்று தெரிவித்தார் அமைச்சர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாஜகவை பொருத்தவரையில் அது அகில இந்திய தேசிய கட்சி என்ற காரணத்தால், அவர்களின் கொள்கை படியே அகில இந்திய கட்சி தலைவர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பார். கூட்டணியில் மாநிலக் கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால் மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணியில் இருக்குமானால் முதலமைச்சர் வேட்பாளரை மாநில கட்சிகள் அறிவிக்க இயலாது என்ற காரணத்தால், தேசியக் கட்சிதான் அறிவிக்கும் என்று தெரிவித்தார். இவருடைய இந்த கருத்தானது அதிமுகவின் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Previous articleவீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!
Next articleசகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!