
ADMK BJP: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் எவ்வளவு முயன்றும் அது பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கே இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது.
பாஜக இந்திய அளவில் மிக பெரிய கட்சி என்பதால், தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் இங்கு அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கூறி வந்தனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜகவிற்கு அதிமுக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைத்து தங்களுடைய வலுவான தடத்தை பாதிக்கலாம் என பாஜக நினைத்தது. ஆனால் தமிழகத்தில், வெற்றி பெரும் வரை தான் கூட்டணி. அதன் பிறகு ஒற்றை தலைமை என்ற முறை தான் நீடித்து வருகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்ற மரபே கிடையாது என்று தொடர்ந்து கூறி வந்தார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தாலும், அதன் உள் வட்டாரத்தில் சில முரண்பாடுகள் நிலவிய வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும் சமயத்தில் அதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நோக்கிலும், பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார். NDA வெற்றி பெற்றால் தனி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் கூட்டணி ஆட்சி என்ற முடிவிலோ இருந்து பாஜக பின் வாங்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
