
TVK NTK: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தவெக ஒன்றரை வயதை மட்டுமே எட்டியுள்ள நிலையில் அதற்கான ஆதரவும், ஆரவாரமும் பெருமளவில் உள்ளது. இந்நிலையில் தவெகவில் பலரும் இணைந்து வர, அவர்களுக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கலாம் என்பதில் விஜய் மும்முரமாக உள்ளார். அதிமுக, திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜாவை தவிர்த்து மற்ற யாரையும் மக்களுக்கு தெரியாது.
இதனால் திராவிட கட்சிகளில் இருக்கும் தலைவர்களை மக்கள் நியாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் உயர்த்த வேண்டும் என விஜய் முயற்சித்து வருகிறார். இவ்வாறான நிலையில் தான் 234 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் வலுவான வேட்பாளர்களை தேடும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. “வி” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்ற செய்தி பரவியது.
இந்நிலையில் விஜய்யை எதிர்த்து அதிமுக, திமுக, நாதக போன்ற முன்னணி கட்சிகளிலிருந்து யார் போட்டி போட போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், நாதகவின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் விஜய் எந்த தொகுதியில் நிற்கிறாரோ அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார். இவரின் இந்த நிலைப்பாடு அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே விஜய் போட்டியிடும் தொகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தவெகவை எதிர்த்து போட்டியிட போவது உறுதியாகியுள்ளது.
