DMK CONGRESS TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் திமுக உடன் பல ஆண்டு காலமாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணையுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. பீகார் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ் தற்போது தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு போதிய செல்வாக்கு இல்லாத காரணத்தினால் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதன் மூலம் தங்களை தமிழகத்தில் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
ஆனால் திமுக தலைமை இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. இதனால் தவெகவில் இணைவது போன்ற போக்கை காங்கிரஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் அண்மையில் காங்கிரசின் முக்கிய புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். காங்கிரஸ் தலைமையின் அனுமதி பெற்று அவர் விஜய்யை சந்திக்கவில்லை என்று தமிழக காங்கிரஸை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர்.
இவ்வாறான நிலையில், திமுகவிற்கு எதிராக பிரவீன் சக்கரவர்த்தி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளது திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி பின்னால் பாஜக இருப்பதாகவும், அவரின் நடவடிக்கைகள் குறித்து தலைமையிடம் புகார் அளித்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு திமுக, காங்கிரஸ், தவெக குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து பேசப்படுவது அரசியல் களத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.