BJP IJK: சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பல ஆண்டுகளாகவே பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழக மக்கள் பாஜகவின் இந்துத்துவ வாதத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இதனால் தமிழ்நாட்டில் செல்வாக்கு உள்ள கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க போகிறது. மேலும் பாஜக கூட்டணியில் தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் நிலவு வரும் மோதல் போக்கு பாஜகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி மேலிடம் நினைக்கிறது.
இதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்ட பாஜகவிற்கு இது தோல்வியிலேயே முடிந்தது. இதனால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பீகார் வெற்றியை மையமாக வைத்து தமிழகத்தில் நிலைபெறலாம் என்று நினைத்த பாஜகவிற்கு அதன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் மிகவும் அதிருப்தியில் இருந்த டெல்லி மேலிடத்திற்கு தற்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஐஜேகே தற்போது வரை பாஜக உடன் தான் தொடர்கிறது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசிய ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை 7 முதல் 8 தொகுதிகள் வரை கேட்போம் என்றும், மூன்று முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முறை வென்றுள்ளோம். அதனால் எங்களுக்கு 7 முதல் 8 தொகுதிகள் ஒதுக்குவது தான் நியாயமாக இருக்கும் என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை காரணமாக பாஜக குழம்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி வாய் திறந்தது மேலும் புகைச்சலை உண்டாக்கியுள்ளது.