TVK ADMK: பிரபல நடிகராக இருந்த விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு புறம் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் இன்னும் அரசியலை கற்க வேண்டும், ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அவர் நடிகர் என்பதால் மட்டுமே வருகிறது, அதனை விஜய் தொண்டர்கள் கூட்டம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று பல கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர். திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறிய நிலையில் அதற்கு இபிஎஸ், வானதி சீனிவாசன் போன்றோர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை திராவிட கட்சிகளாக திகழும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறினார்கள்.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் விஜய்யை விமர்சித்துள்ளார். அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்டு வரும் இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் ஒரு தொட்டில் குழந்தை, அரசியலுக்கு வந்த ஒரு வருடத்திலேயே திராவிட கட்சிகளுடன் மோதுவது முட்டாள் தனமான காரியம் என்றும், தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக இருந்தாலும், அரசியல் என்பது வேறு என்று கூறினார்.
விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என்றும், அவரது பேச்சுகள் அரைகுறையாக உள்ளது. அரசியலில் விஜய்யிக்கு அனுபவம் தேவை என்றும் அறிவுரை கூறினார். அண்மையில் அதிமுகவை சேர்ந்த பலரும் விஜய்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். விஜய் அதிமுகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விமர்சனங்கள் காரணமாக அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.