பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து எடுத்த முடிவு!! குவியும் பாராட்டு!!
பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் எனபவருக்கும் அண்டை கிராமமான ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரி என்பருக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 12ம் வகுப்புப் படித்து முடித்த உடனேயே நேகாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் நேகாவுக்கு தனது படிப்பைத் தொடர ஆசை. அதனால் தனது விருப்பத்தை வீட்டில் சொல்லி உள்ளார். நேகாவின் கணவனும் அவரின் வீட்டு பெரியவர்களும் அவரை படிக்க அனுமதிக்கவில்லை. இதனால் நேகா, தனது புகுந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
பின் அவர் பாட்னாவுக்கு வந்து விட்டார். இது குறித்து அறியாத நேகாவின் தந்தை நேகாவை யாரோ கடத்தி விட்டதாக பயந்து அந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேகாவுக்கு இதுகுறித்து தகவல் வர அவர் கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து தனது நிலைமையை கூறி அவரிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து நேகாவின் புகுந்த வீடு மற்றும் பிறந்த வீடு ஆகிய வீட்டாரையும் பஞ்சாயத்திற்கு அழைத்தனர். அந்த பஞ்சாயத்தில் மேகா கூறியதாவது: “நான் எனது மேற்படிப்பை தொடர விரும்புகிறேன் ஐஐடி படித்துவிட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறேன் ஆனால் இதை என் கணவர் ஏற்க மறுக்கிறார் அதனால் நான் என் கணவரை பிரிய அனுமதி வழங்க வேண்டும்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார்.
பஞ்சாயத்தார்கள் நேகாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரின் இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு வீட்டாரும் நேகாவின் படிப்பிற்கு சம்மதம் கொடுக்கவில்லை. எனவே பஞ்சாயத்து தலைவர் “நேகாவின் படிப்பிற்காக அவரது கணவரை பிரியலாம்” என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் பஞ்சாயத்து தலைவர் நேகாவை இதன்பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என்று இரண்டு வீட்டார்களிடமும் எழுதி வாங்கிக் கொண்டார். பொதுவாக கிராமங்களில் பெண்களின் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள் என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஒரு பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றது.