DMK TVK: சுமார் 70 வருடங்களாக தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து வரும் திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. திமுகவின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்தது அதிமுக. அதனை முறியடிக்க தற்போது தவெக களமிறங்கியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி, தவெக பிரதான அரசியல் எதிரி திமுக தான் என்று கூறியிருந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்றும், சிம் சார் என்றும் நேரடியாக விமர்சித்திருந்தார்.
ஆனால் திமுகவை சேர்ந்தவர்களோ விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. அப்படியே விமர்சித்தாலும், மறைமுகமாக விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். புதிய கட்சியான தவெகவை, மிகப்பெரிய திராவிட கட்சி விமர்சிக்க தொடங்கி விட்டால் விஜய் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தினால் திமுக தவெகவை விமர்சிக்காமல் இருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறினார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே திமுகவும் நடந்து கொள்கிறது. தவெக அரசியலில் குதித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இப்போதும் கூட திமுக தவெகவை விமர்சிக்க யோசிப்பது வேடிக்கையாக உள்ளது.
திராவிட கழக தலைவர் வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய உதயநிதி, திமுகவில் கவுன்சிலர் பதவி கூட வேண்டாம், கொள்கை, சமுதாய தொண்டு தான் முக்கியம் என்று இத்தனை ஆண்டுகள் பணியாற்றுகின்றனர். ஆனால் ஒரு சிலர், நேற்று கட்சி துவங்கி விட்டு, இன்று முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

