
DMK BJP: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதாக கூறிய தேர்தல் வாக்குறுதி எண் 354 இன்னும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தாம்பரம் அரசு மருத்துவமனை குறித்து பேசும் போது, இரண்டு மாதங்களுக்கு முன் நான் தானே தொடங்கி வைத்தேன் என்று முதல்வர் கூற வேண்டாம். ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அந்த மருத்துவமனையில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளே இல்லை இதுவே நிதர்சனம் என்று நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், சோழிங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்க படவே இல்லை எனவும், அந்த பகுதிகளில் செங்கல் கூட நடப்படவில்லை எனவும் கூறினார். ஏழை மக்களின் உடல் நலம் புறக்கணிக்கப்பட்டு, அரசு வெறும் வெற்று விளம்பர அரசாக மாறியுள்ளது, எனவும் அவர் கூறினார். திமுக அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டன என்றும், அகங்காரத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு, மக்களின் கோபத்தில் சாம்பலாகும் நாள் வெகு தூரமில்லை.
2026 தேர்தலில் மக்கள் இதை மறக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்தார். ஏற்கனவே திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகளும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் விமர்சித்து வரும் நிலையில் ணியினாரின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
