DMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. பாஜக தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவும் தற்சமயம் தேர்தல் நெருங்க இருப்பதால் அவர்களுக்குள் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான அனுமதியை திமுக அரசு மத்திய அரசிடம் கேட்ட போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவை பல்வேறு இடங்களில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுக்கவில்லை. விரிவான விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மற்றும் மதுரை அதிமுக வசம் இருப்பதாலும், தற்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருப்பதாலும் அங்கு எந்த திட்டமும் சென்றடைய கூடாது என்று திமுக அரசு குறைவான தகவலை மட்டுமே அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க போதிய இட வசதியை பெற்று தருவதாக திமுக அரசு இது வரை கூறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவரின் இந்த கருத்து கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு அவப்பெயர் பெற்றுத் தரும் நோக்கில் திமுக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

