DMK CONGRESS: 2026 யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என ஆளுங்கட்சியாக உள்ள திமுக முயற்சித்து வருகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணி சலசலப்புகளை பயன்படுத்த நினைத்த திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளும் அதையே செய்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதும், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதையும் கண் கூடாக பார்க்க முடிகிறது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் சூசகமாக கூறி வந்தனர். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்த காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவுக்கு பின் அமைதியாகிவிட்டது. இன்று காங்கிரஸ் அமைத்த 5 பேர் கொண்ட குழு ஸ்டாலினை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் மீண்டும் ஆட்சி பங்கு கோரிக்கையை முன் வைக்க போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு சில மாதங்களாகவே காங்கிரஸ்-திமுக இடையே சச்சரவு தொடர்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், திமுக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அந்த ஆதங்கத்தின் அடிப்படையில் தான் ஆட்சியில் பங்கு கோரிக்கை எழுகிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருவதால், தேர்தலில் வெற்றி பெற்றாலும், கொள்கை ரீதியாக தனித்தன்மையுடன் செயல்பட்டு அமைப்பை வலிமைப்படுத்தி முடியவில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய மதிப்பு இல்லை என்பதையும், திமுக உடன் இருப்பதால் வலிமை பெற முடியவில்லை என்பதையும் நிரூபித்திருக்கிறது.

