தமிழகத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் சிறிய நகரத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஏனெனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பயணத்தை கொடுக்கிறது.
ஆனால், பேருந்து ஓட்டுனர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இலவச பயணம் என்பதால் நடத்துனர்களும் அவர்களை பேருந்தில் ஏற்ற ஆர்வம் காட்டுவது இல்லை. பேருந்து நிறுத்தத்தில் கூட நிற்காமல் வண்டியை ஓட்டி சென்றுவிடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று பிளஸ் டூ மாணவர்களுக்கு கடைசி தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் வாணியம்பாடி அருகேயுள்ள கோத்தக்கோட்டை எனும் பகுதியில் தேர்வு எழுத செல்ல மாணவி காத்திருந்தார். ஆனால், பேருந்து ஓட்டுனர் அவரை ஏற்றமால் கடந்து சென்றார். இதனால், அந்த மாணவி பேருந்தின் பின்னாலேயே ஓடினார். மாணவி ஓடி வருவதை பார்த்த பேருந்தில் இருந்த சிலர் ஓட்டுனரிடம் சொல்ல பேருந்து நிறுத்தப்பட்டது. அதன்பின் மாணவி பேருந்தில் ஏறி சென்றார்.
இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்த பலரும் அந்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கண்டனம் தெரிவித்தனர். விசாரணையில் அந்த ஓட்டுனர் பெயர் முனிராஜ் என்பது தெரியவந்துள்ளது. ஆம்பூர் பனிமனையில் இருந்து சென்ற பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு முனிராஜ் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். போக்குவரத்து கழகம் எடுத்த இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.