PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ஆனால் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த சண்டை உச்சம் பெற்ற நிலையில், மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு, அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க, இதனை ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். மேலும் அன்புமணி போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்று ராமதாஸ் தரப்பு தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிமன்றம் விசாரித்த போது, ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் மாறி மாறி அவர்களது வாதத்தை முன் வைத்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், பாமகவில் தற்போது தலைமை பிரச்சனை உள்ளது. இதனால் மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் வரும் என்று கூறிய தேர்தல் ஆணையம், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சின்னம் முடக்கப்பட்டது பாமகவிற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

