மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி!
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறையை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருந்தே இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் எக்ஸ் தளத்தில் இவிஎம் மிஷன் பற்றி பதிவிட்டது கவனம் ஈர்த்து வருகின்றது.
எலான் மஸ்க் அவர்கள் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “மனிதர்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் இ.வி.எம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம். எனவே இ.வி.ஏம் இயந்திரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் அவர்களின் இந்த பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக மிக பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து யாராலும் ஹேக் செய்யப்பட முடியாதவை” என்று கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களின் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க் அவர்கள் “எதையும் எப்படி வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம்” என்று கூறினார். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் இவிஏம் முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும் பொழுது மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை என்னவென்றால் அது வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்பொழுது கருப்பு பெட்டியாக மாறி இருக்கின்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை மற்றும் அவற்றின் வெளிப்படை தன்மையை தேர்தல் ஆணையம் முழுமையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வெளிப்படை தன்மையை தெரிவிக்கவில்லை என்றால் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.