TVK CONGRESS: விஜய்க்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்தில் கூட ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசி ஆறுதல் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருவதால், பாஜகவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று அனைத்து ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால் விஜய் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
திமுக தனது அரசியல் எதிரி என்பதில் தீர்க்கமாக இருக்கும் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகும் அவருடைய பணியை தொடரும் நோக்கில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி வியூகங்களையும் திரைமறைவில் வகுத்து வரும் விஜய் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி பயணத்தை முடித்த, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், திடீரென்று நேற்று முன் தினம் சத்தியமூர்த்தி பவனில் செயற்குழு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, தமிழக காங்கிரஸ் பூத் கமிட்டி அமைப்பு இன்னும் நிரப்பப்படவில்லை, அதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறினார். விஜய்-காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம், டெல்லி மேலிடம் சரியான முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். விஜய் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு காங்கிரஸ்-விஜய் கூட்டணி தோல்வியில் முடிந்ததையே உணர்த்துகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

