
PMK: பாமகவில் கடந்த சில மாதங்களாகவே கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடும் தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ், அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
மேலும் கட்சி அலுவலக முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சுமத்தியது. இதனை அன்புமணி தரப்பு மறுத்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து அன்புமணிக்கும், ராமதாசிற்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிதாகி கொண்டே சென்றது. இதனால் பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறினர்.
தற்போது புதிய திருப்பமாக கட்சியின் இளைஞரணி சங்க தலைவராக இருந்த ராமதாஸின் மூத்த மகளின் மகனான முகுந்தன் கட்சி பொறுப்பிலிருந்து விலகியதால், அதன் தலைவராக ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இவர் ஏற்கனவே இந்த பதவியிலிருந்து விலகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன் பொறுப்பேற்ற போது அன்புமணிக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்ற செய்தியும் பரவி வந்தது. தற்போது இதை மீண்டும் ராமதாஸ் செய்துள்ளதால் இது அன்புமணிக்கு கோபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் சொல்லப்படுகிறது.