இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவை இல்லாததால் குழந்தையின் சடலத்தை துணிப்பையில் போட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை பிரசவத்திற்காக அங்கு இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார். அவரது மனைவி அங்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தை பலவீனமாக இருந்த காரணத்தால் மேல் சிகிச்சைக்காக ஜபால்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்தவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குழந்தை இறந்தவிட்டது.
இதையடுத்து குழந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் அமரர் ஊர்தி கேட்ட தந்தை சுனில் துர்வே அவர்களிம் மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி சேவை இல்லை என்று கூறியது. தனியார் அமரர் ஊர்தி சேவையை பயன்படுத்த அவரிடம் பணமும் இல்லாததால் இறந்த குழந்தையின் உடலை ஒரு துணிப்பையில் வைத்து பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளார். இதை பற்றி சுனில் துர்வே அவர்கள் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கத்துடன் கூறியுள்ளார். ஆனால் இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் சஞ்சய் மிஷ்ரா அவர்கள் “புதிதாக பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் நிலைமை மிக மோசமாக இருந்த போதிலும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி குழந்தையின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்யும் பொழுது குழந்தை உயிருடன் தான் இருந்தது” என்று அவர் கூறினார். இவர் கூறியதை குழந்தையின் தந்தை சுனில் துர்வே மறுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.