நாட்டு வெடிகுண்டு தயாரித்த தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்!
புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகள் உடன், மகனையும் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன். 37 வயதான இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரதீஷ் என்ற 7 வயது மகனும், 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கலைநேசன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா அச்சத்தின் காரணமாக ஊர் திரும்பிய அவர், அதை தொடர்ந்து மீண்டும் வெளிநாடு செல்லவில்லை என கூறுகின்றனர். மேலும் அவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் லேத் பட்டறையில் டர்னராக பணியில் சேர்ந்தார்.
மனைவி ரூபனாவும் புதுவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியில் நர்சாக வேலை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி அரியாங்குப்பத்தில் தயாரித்த நாட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக மாமனார் வீட்டில் கலைநேசன் கொடுத்திருந்தார். மேலும் தீபாவளி பண்டிகைக்காக ரூபனா தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் தீபாவளி அன்று மாமனார் வீட்டிற்கு சென்ற கலைநேசன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு, அதன் பிறகு மனைவியை தன் வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.
அதற்கு மனைவி பின்னர் வருவதாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாக கலைநேசன் தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் தன் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது விற்பனையாகாமல் இருந்த நாட்டு பட்டாசுகளையும் ஒரு பையில் வைத்து வண்டியில் ஏற்றி உள்ளார். மேலும் அதன் மேல் மகனை உட்கார வைத்து அழைத்து வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக புதுவை மற்றும் தமிழக எல்லையான கோட்டக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்தபோது அவர் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் கலைநேசன் மற்றும் அவரது மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். அவர்கள் இருவரின் உடல் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு சிதறி அங்குள்ள கட்டிடங்கள் வீடுகளின் மீது கிடந்தன.
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது. இது பார்ப்போரை மிகவும் பாதித்தது. மேலும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் போது அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றும் அருகில் நிறுத்தி இருந்த லாரி, கார்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் அனைத்தும் சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தை பார்த்த போது அங்கு ஏதோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததாகவும் பயத்துடன் கூறினார்கள். விபத்தின் போது அந்த வழியாக தனித்தனி வாகனங்களில் வந்த மேலும் மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் நடந்ததன் காரணமாக இரு மாநில போலீசாரும் வெடி விபத்து குறித்து விசாரணையை தற்போது நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் என்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.