மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஆகிவிட்டது ஆனால் இதுவரையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்து இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களையும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைப்பதற்கு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக் கொள்வோம் என்று விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள் ஆகவே மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
அதேபோல விவசாயிகள் 50 தினங்களுக்கு மேலாக நடத்திவரும் இந்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விவசாயிகள் விரைவாக ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஐந்து தினங்களில் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விவசாயிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மத்திய அரசு இந்த அளவிற்கு இறங்கி வந்ததற்கு காரணமே எதிர்வரும் குடியரசு தினம்தான் என்று பரவலாக பேசப்படுகிறது. ஏனென்றால் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்திய குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயத்தில் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற வெளிநாட்டு தலைவர்களும் அந்த குடியரசு விழாவில் பங்கேற்பார்கள். அந்த நிகழ்வை உலகம் முழுவதும் உற்று நோக்கி கொண்டிருக்கும்.
அந்த சமயத்தில் விவசாயிகள் இது போன்ற ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தால், அது உலக அளவில் இந்தியாவிற்கு எதிராக அமைந்து விடும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆகவே இந்த வேளாண் சட்டங்களை ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.