உத்தரபிரதேசத்தின் மோடி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும், காசியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காசியாபாத்தில் உள்ள மோடிநகரின் பகர்வா கிராமத்தில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் வெடி விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்று காவல்துறையிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கே சென்று இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுறுத்தினார்.மேலும் இந்த வெடி விபத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று விரைவில் கண்டுபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளார் என்று முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.