மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!
தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் நடத்தியதாகவும், தடுப்பூசிக்கு சான்றிதழ்கள் எதுவும் தரப்படவில்லை எனவும், கூறப்பட்டதன் காரணமாக புகார்கள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து மேற்கு வங்காள மாநில அரசு தலைமை செயலாளர் ஹரிகிருஷ்ணா திரிவேதிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதன் மூலம் அவர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அனைத்து பணிகளும் ‘கோ-வின்’ வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறை ஆகும். அதில் பதிவு செய்வதன் மூலம் தடுப்பூசி போடுபவர்களுக்கு சான்றிதழ் கண்டிப்பாக உருவாக்கப்பட்டு விடும்.
ஆனால், சான்றிதழ் கொடுக்காத காரணத்தினால், அந்த தடுப்பூசி முகாம்களின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் எழுகிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட மருந்து பற்றியும் அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து மாநில அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இதுதொடர்பான உண்மை நிலவரம் பற்றிய அறிக்கையை 2 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.