உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

Photo of author

By Sakthi

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று தாக்குதலை தொடங்கிய நிலையில் அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாடுகளின் பொதுமக்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியா இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது அதாவது நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எவ்வாறு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வரலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதாவது உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் உக்ரைனிலிருக்கும் இந்திய மக்களை பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அந்த நாடுகளும் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தங்கள் நாடுகள் வழியாக இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கு உதவுவதாக தெரிவித்தார்கள்.

ஆனாலும் உக்ரைன் நாட்டிற்கு இந்தியா சார்பாக இந்திய மக்களை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று அனுப்பப்பட்டது. ஆனால் உக்ரைனை நெருங்கும் தருவாயில் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அந்த விமானம் மறுபடியும் டெல்லிக்கு திரும்பியது.

அதன் பிறகு மாற்று வழியாக உக்ரைனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து அதன் பிறகு கத்தாரிலிருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையின் காரணமாக தவித்து வரும் தமிழகத்தைச் சார்ந்த 5000 மாணவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இன்று காலை 10 மணியளவில் தமிழக மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவிலும், டெல்லியிலும் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்திருக்கிறது தமிழக அரசு.