சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

Photo of author

By Janani

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

Janani

Updated on:

நம்மில் பலரும் நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானை கண்டு பயமடைந்துள்ளோம் என்றால் அதில் மிகை இல்லை. சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார்.

சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி கிரகம் தான்.

சனிபகவானை பார்த்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரே அவர் தான். எனவே அவரைப் பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. சரியாக நமது கடமையை செய்து வந்தோம் என்றால் எந்தவித பயமும் தேவையில்லை. அதேபோன்றுதான் சனி பகவானிடம் நாம் நேர்மையாக இருந்தால் பயம் தேவையில்லை.

“சனியைப் போல் கொடுப்பாறும், சனியைப் போல் கெடுப்பாறும் எவருமில்லை” என்பது பழமொழி. இதிலிருந்து தெரிகிறது சனீஸ்வரர் கொடுப்பதில் மிகச் சிறந்த வல்லவர் என்று. அதே போன்று சனிபகவான் தனது கடமையிலிருந்து சிறிதும் தவறாதவர் ஆவார். சனிபகவான் சிவனை பிடிக்கும் காலம் வந்த பொழுதும் கூட, தனது கடமையிலிருந்து தவறவில்லை.

அதாவது ஒரு நாள் சனி பகவான் தேவ லோகத்தை நோக்கி விரைந்து சென்றார். அதனை கண்ட தேவர்கள் அனைவரும் சனிபகவான் இன்று யாரை பிடிக்க போகிறாரோ?! என்று பயந்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் அனைத்து தேவர்களும் ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கின்றனர்.

ஆனால் சனி பகவான் தேவ லோகத்தை கடந்து செல்கிறார். அதனை கண்ட தேவர்களுக்கு மிகவும் ஆச்சரியம், உடனே மறைந்திருந்த தேவர்கள் அனைவரும் சனிபகவான் அப்படி யாரை தான் பிடிக்க செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரை பின்தொடர்ந்து சென்றனர். சனி பகவானோ கைலாயத்தை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறார்.

சனிபகவான் வரப்போவதை அறிந்த சிவபெருமான், தன்னைத்தான் பிடிக்க போகிறார் என்பதை யூகித்து, சனிபகவானின் பிடியிலிருந்து தப்பித்து ஒளிந்து கொள்ள இடத்தை தேடுகிறார். அதன் பிறகு பெருமாளின் வழிகாட்டுதலின்படி ஒரு குகையில் ஒளிந்து கொண்டு, அதன் வாசலையும் அடைத்துக் கொள்கிறார். அதன் பிறகு சிவபெருமான் தியானத்தில் அமர்ந்து விடுகிறார்.

சில வருடங்களாக அவர் தியானத்திலேயே இருக்கிறார். பின்பு ஒரு நாள் சிவபெருமான் குகையில் இருந்து வெளியே வரும் பொழுது, சனி பகவான் அவருக்காக வெளியில் காத்து அமர்ந்து கொண்டிருந்தார். சனிபகவானை பார்த்த சிவபெருமான் சிரித்துக்கொண்டே பார்த்தாயா சனி நான் உனது பிடியிலிருந்து தப்பித்து விட்டேன், நீ என்னை பிடிக்கும் காலமும் முடிந்து விட்டது என்று கூறினார்.

ஆனால் சனி பகவானோ சுவாமி நான் உங்களை முன்பே பிடித்து விட்டேன், எனது பிடியில் நீங்கள் இருந்ததால் தான் 71/2 ஆண்டுகள் பார்வதி தேவியை கூட பார்க்காமல் இந்தக் குகையில் நீங்கள் இருந்தீர்கள் என்று கூறினார். சனிபகவான் கூறியதை கேட்ட சிவபெருமான் வியப்படைந்து சிவன் என்றும் பாராமல் உனது கடமையை நீ சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் பெயரை உனக்கு பட்டமாக நான் வழங்குகிறேன் என்று கூறினார்.

இன்று முதல் உன்னை “சனீஸ்வரர்” என்ற பெயரைக் கொண்டு அழைப்பார்கள் என்று வாழ்த்துகிறார். இவ்வாறு தான் நீதி தவறாத சனி பகவானுக்கு ஈஸ்வரன் பட்டம் கிடைத்தது.