TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த விறுவிறுப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய்யின் அரசியல் வருகை. தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. மேலும் இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து மாநில அரசு தொடங்கி மத்திய அரசு வரை அனைவரும் விசாரித்து வந்தனர். எந்த ஒரு சம்பவத்திற்கும் இவ்வளவு ஆர்வம் காட்டி அதிகாரியை நியமிக்காத தமிழக அரசு கரூர் சம்பவத்தில் மட்டும் உடனடியாக தனி நபர் ஆணையத்தை அமைத்தது. விஜய் தனது கொள்கை எதிரி என்று கூறி வந்த பாஜகவும் விஜய்க்கு உதவுவதாக கூறி பாஜக எம்பி ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வந்ததது. இதனால் பாஜக தவெக கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது என்ற சந்தேகமும் எழுந்தது.
ஆனால் விஜய்க்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தும் பதிவிடாமல் இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிய பட்ட போது, விஜய் மீது வழக்கு போடப்படவில்லை. தமிழக அரசின் இந்த செயல் திமுக கூட்டணியிலிருக்கும் ராகுலின் கட்டளை என்று பலரும் கூறி வந்தனர். இதன் காரணமாக தவெக-காங்கிரஸ் கூட்டணி திரை மறைவில் பேசப்படுகிறது என்ற தகவலும் பரவியது.
விஜய், காங்கிரஸுடன் நெருக்கமாக இருப்பதால் இந்த கூட்டணி சாத்தியம் என்ற கருத்தும் வலுப்பெற்றது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், செல்வப்பெருந்தகை ஒரு கருத்தை கூறியுள்ளார். தவெக குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்காக தொடர்ந்து போராடும் தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று தவெக-காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளமிட்டது போல் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

