விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சென்ற மக்கள் பலர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 150 பக்தர்கள் சிக்கி கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. தீபாவளி காரணமாக மக்கள் அங்கு சென்று பலரும் வழிபட்டு வந்தனர். இதுமட்டும் அல்லாமல் தீபாவளி கொண்டாட வந்த பலரும் இந்த நீரோடையில் குளித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கனமழை பெய்தது.
இதனால் அங்கு உள்ள நீரோடையில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் மக்கள் நீரில் சென்றால் உள்ளே மூழ்கி விடுவோம் என பயந்து நீரோடையின் மறுபுறம் சிக்கி கொண்டனர். அதில் 40 பெண்கள் உள்பட மொத்தம் 150 பேர் நீரோடையின் மறுபக்கம் சிக்கி கொண்டனர். மழையின் அளவும் அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் மக்கள் பெரும் பயத்தில் இருந்தனர். இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மக்களின் அலறல் சத்தமும் அதிகரித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீரோடையின் இருபுறமும் கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு 150 பேரும் பத்திரமாக மீட்டனர். இதனால் மக்கள் தீயணைப்பு துறைக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.