
PMK: தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை தீட்டி வரும் நிலையில் பாமகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. அது தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. இந்த சூழல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணிக்கு வழங்கப்பட்ட கடிதம் தொடர்பாக பாமகவில் குழப்பம் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில், கட்சியின் தலைமை பதவியை அன்புமணி வகிக்கிறார் என்ற வகையில் சிலர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உரிய நடைமுறை ஏதும் பின்பற்றாமல் அன்புமணிக்கு அந்தக் கடிதம் வழங்கப்பட்டதாகக் கூறி, ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர்.
பாமக நிர்வாக விதிகளின்படி, தலைமைப் பொறுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், தனிநபர் எடுக்கப்பட்ட முடிவு செல்லாது என்றும் ராமதாஸ் அணியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால், பாமகவின் சின்ன உரிமை மற்றும் தலைமை பதவி தொடர்பான பிரச்சனை மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. அன்புமணி தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. எங்களை கேட்காமலே இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறான கடிதத்தை வழங்கியுள்ளது என்றும், இருவரையும் அழைத்து பேசி பாமக சின்னத்தையும், கட்சி பொறுப்புகளையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்று மனு அளிக்கபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.