
ADMK: சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருந்தார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை சிதைக்க பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக தான். அந்த நன்றியை மறக்காமல் இருக்கிறோம் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அவரை காப்பாற்றியது பாஜக இல்லை என்றும் அப்போது சட்டசபையில் இருந்த 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் தான் என்றும் கூறினார். பாஜகவிற்கு நன்றியோடு இருப்பதாக இ.பி.எஸ் கூறுகிறார். ஆனால், அவர் ஆட்சியில் அமர காரணமாக இருந்தவர்களை மறந்து விட்டு, அவருக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்து கொண்டார் என்றும் இ.பி.எஸ். மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டி.டி.வி தினகரனின் இந்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவித்தது இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்றிணைய உள்ளனர் என்பதை விளக்கிக் கூறுவது போல உள்ளதென அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இது சட்டமன்ற தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.