ADMK: தமிழக அரசியல் அரங்கு 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திராவிட கட்சிகள் அதனை சிறப்பாக செய்து வரும் வேளையில், அந்த பணி பாதியளவு முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த முறையாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென அதிமுக போராடி வருகிறது. இபிஎஸ் அதிமுக தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதனை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறது.
ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்களின் செயல் அதிமுகவை மீண்டும் தோல்வியை நோக்கி கொண்டு செல்கிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலருக்கு பிடிக்க வில்லை. மேலும், அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதால் அதன் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இதனை சரி செய்ய வேண்டுமென நினைத்து, இபிஎஸ்க்கு எதிராக போர் கொடி தூக்கிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் தவெகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை மன்ற இணைச்செயலாளராக பணியாற்றிய சங்கர் என்பவர், தூய்மை பணியாளிரிடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கட்சியின் கொள்கைக்கும், ஒழுக்கத்திற்கும் எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து அவர் நீக்கபட்டுள்ளார். ஏற்கனவே கோவையில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இது குறித்து அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. ஆனால் தற்போது அதிமுக கட்சியிலேயே இது நடந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை அதிமுகவின் முக்கிய அமைச்சரான சிவி சண்முகம் இலவச பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு பேசியதும் குறிப்பிடத்தக்கது.

