DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திராவிட கட்சிகள் தங்கள் செல்வாக்கை மக்கள் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளனர். தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு திட்டமிடுதலை செய்து வருகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சியை பிடித்திட வேண்டுமென போராடி வருகிறது.
ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறது. முதலில், திமுக ஆட்சியில், இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார், அடுத்து கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்துவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் திமுக கூட்டணியில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் இவ்வாறான பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பதென்று தெரியாமல் திணறி வரும் திமுக தலைமைக்கு, மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் SIR மேலும் சவாலாக உள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து பலரும் விலகி, அதிமுக, தவெக கூட்டணியில் இணைந்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
திமுகவின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் வைரமணி, மாவட்ட செயலாளரை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள், திரும்ப திரும்ப இதை நான் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. இந்த பதவியை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரின் இந்த கருத்து திமுக தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சிறிதும் மதிக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும் வைரமணி கூடிய விரைவில், திமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

