MDMK DMK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பணியையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளிடமும் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ தேர்தல் நெருங்கும் தருவாயில், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றன. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஸ்டாலினுக்கு தற்போது புதிதாக திமுகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வரும் மதிமுக விலக போகிறது என்ற பகீர் தகவலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கூறியுள்ளார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த இவர், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற போவதாகவும், வைகோ வேறு ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு முறை வைகோவிற்கு பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருக்கிறது என்று கூறியதால், மதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகோவின் மகன் இந்த தேர்தலில், தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததையெல்லாம் வைத்து பார்த்தால் கூடிய விரைவில் மதிமுக திமுகவை விட்டு விலகும் என்பது உறுதியாகியுள்ளது.

