DMK TVK: அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு வேகம் எடுத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்த தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி விட்டார். இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு, அவரை கூட்டணியில் சேர்க்க முயன்ற அதிமுகவிற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
மாற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், தவெகவை கூட்டணியில் சேர்க்கும் பணியை அதிமுக தொடர்ந்து செய்து வந்தது. ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையை இபிஎஸ்யால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தவெக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு துணைமுதல்வர் பதவி, பாதியளவு தொகுதிகள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் விஜய் இவை எதற்கும் தலையசைக்கவில்லை என்று தகவல் பரவியது.
இவ்வாறான நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என்று தவெகவிற்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலடியாக பேசிய தவெக நிர்வாகி, நிர்மல் குமார், எங்கள் தலைவரை முதல்வராக்க யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று கூறி முடித்தார். இவ்வாறு அதிமுக-தவெக இடையே காரசார விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதால் இதனை முடிவுக்கு கொண்டு வர, அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் விஜய்யை நேரில் சந்தித்து கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் சிக்கல் குறித்தும் கலந்துரையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் சந்திப்பின் மூலம் அதிமுக- தவெக கூட்டணிக்கு ஒரு முடிவு தெரியவரும் என்று யூகிக்கப்படுகிறது.