VANATHI SRINIVASAN: பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்துத் தொகுதி ரீதியான கோரிக்கைகளை வைத்துள்ளார்.
பல வருடங்களாக பகை இருந்தது போல எலியும் பூனையுமாக இருந்த திமுக மற்றும் பாஜக கட்சிகள் கடந்த சில வாரங்களாக நட்பு பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த கலைஞர் கருணாநிதி நினைவு நாணய விழாவில் பாஜக தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, முன்னுரிமை, திமுக மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே இருந்த நெருக்கம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது திமுக கட்சி காங்கிரஸை ஓரம் தள்ளி வைத்து பாஜகவை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.
இதையடுத்து திமுக கட்சியின் கூட்டணியில் பாஜக என்ற தகவலை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மறுத்துள்ளார். இந்நிலையில் பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
பாஜக கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும் கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். மேலும் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளையும் முதல்வரிடம் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அளித்துள்ளார்.
முதல்வருடனான சந்திப்பு முடிந்த நிலையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும் அவர்கள் கேட்ட கேள்விக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் பதில் அளித்தார்.
இது குறித்து பேசிய வானதி சீனிவாசன் அவர்கள் “கோவை மாவட்டத்திற்கு உண்டான மாஸ்டர் பிளான் என்பது திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறினேன். மேலும் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோரிக்கைகளை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினேன்.
கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் இந்த பணிகளை செய்வதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே நில எடுப்புக்கு மாநில அரசு விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் ரத்து செய்து விடுவதாக முதல்வர் கூறினார்” என்று வானதி சீனிவாசன் அவர்கள் கூறினார்.
இதையடுத்து திமுக மற்றும் பாஜக இடையில் கூட்டணி ஏற்படுமா வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் “இதற்கு நான் என்ன பதில் சொல்வது. திமுக பாஜக கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு குறித்து எதுவும் கூற இயலாது. நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்து மக்களின் பிரதிநிதகளாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்” என்று கூறினார்.
பின்னர் மத்திய அரசு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர் இது குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் “இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் 99 சதவீதம் பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள் தான். நம்முடைய நாட்டையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் கொடுத்திருக்கின்றோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தெரிந்த பின்னரும் இவ்வாறான கேள்விகள் ஏற்புடையது அல்ல” என்று கூறியுள்ளார்.