TVK NMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியிலும், மக்களை சந்தித்து தங்களை நிலைநாட்டுவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு கட்சியில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்று கூறி முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய முகங்கள் பலரும் வேறு கட்சிக்கு மாறி வருகின்றனர்.
இந்த நிலை அதிமுகவிலும், திமுகவிலும் மட்டும் தான் நீடிக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது, நாம் தமிழர் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினரான காளியம்மாள் அந்த கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். அடுத்த கட்டமாக அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று கேள்வி எழுந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய போகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இன்று நாகையில் நடக்கும் தவெக பிரச்சாரத்தில், காளியம்மாள் அக்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட உள்ளார் என்றும், இது உறுதி செய்யபட்டுவிட்டால் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாகை மாவட்டத்தின் தவெக வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தவெகவில் பல கட்சிகளை சேர்ந்தவர்களும் இணைந்து வருவது, அக்கட்சிக்கு புதிய பலமாகவும், சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.