TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து, தங்களது கட்சியை பாமர மக்களின் மனதில் பதிய வைப்பதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகின்றன. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலுக்கு புதிய வருகையாக அமைந்துள்ளது தான் விஜய்யின் தவெக. இந்த கட்சி பெரும் வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த வரவேற்பை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். இந்த நிகழ்விற்கு பிறகு சுமார் 1 மாத காலமாக தவெக தலைவரை தொடங்கி, இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை யாரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். அண்மையில் தவெக வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்க தொடங்கியுள்ளது. மேலும் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. அது மட்டுமல்லாமல், விஜய்யுடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவராக சிலர் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பின்னுக்கு தள்ள பார்க்கிறார்கள் என்ற விவாதமும் எழுந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், மூத்த பத்திரிகையாளர், தாமோதரன் பிரகாஷ் ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை உடைக்கும் அசைன்மெண்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக வழங்கியுள்ளதாக கூறினார். இவரின் இந்த கருத்து தவெகவின் கொள்கை எதிரியுடன் ஆதவ் அர்ஜுன நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா ஒரு முறை தனி விமானத்தில் டெல்லி சென்றது இதற்கு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.

