
DMK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், 2021 தேர்தலில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டுமென அதிமுகவும், இந்த தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டுமென திமுகவும் போராடி வருகிறது. அதிமுக பாஜக, தமாக உடன் மட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளும், நிபந்தனைகளும், திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கையை முதன் முதலில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில், அடுத்ததாக விசிகவும் இதனை பற்றி பேச தொடங்கியுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூடிய விரைவில், அதிக தொகுதிகள் என்ற வாதத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது போல தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடைபெற இருப்பதால் அதற்கு முதல்வருக்கு அழைப்பு விடுக்க வந்தோம் என அவர்கள் கூறினார்கள். தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, அறிவாலயம் வந்தாலே, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மட்டும் தான் பேசுவோமா என்று கோபமாக பதிலளித்திருந்தனர். இவர்களின் இந்த கருத்து தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது. காங்கிரஸ், விசிகவின் கோரிக்கையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்டாலின் தற்போது இவர்களின் நிபந்தனையை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
