சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

Photo of author

By Janani

சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

Janani

ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பொழுது எந்தெந்த ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஒரு ஆலயம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோவிலின் உள்ளே சென்று வழிபடக்கூடிய வழிபாட்டு முறையை சரியாக மேற்கொள்ளும் பொழுது முழு பலனையும் நாம் பெற்றவர்களாக மாறுகின்றோம்.

நாம் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் அங்கு முதலில் விநாயகர் தான் இருப்பார். விநாயகர் இல்லாத ஆலயமே கிடையாது. நாம் சிவனின் ஆலயத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு முதலில் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகரை வழிபடும் பொழுது தலையில் கொட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபடுவது சிறப்பை தரும். அடுத்ததாக முருகப் பெருமான் இருப்பார். அவரை வணங்கி விட்டு அடுத்ததாக தாயாரின் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

ஏனென்றால் நமக்கு என்ன வேண்டுதல்கள் இருந்தாலும், பிரார்த்தனைகள் இருந்தாலும் அதனை முதலில் தாயாரிடம் தான் கூற வேண்டும். தனது வேண்டுதல்களை அப்பாவிடம் அதாவது சிவனிடம் கூறி நீங்கள் தான் நிறைவேற்றி தர வேண்டும் என்று முதலில் தாயாரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் சுவாமி சன்னதிக்கு உள்ளே நுழைய வேண்டும். அங்கு நந்தீஸ்வரர் சுவாமி இருப்பார். எனவே அவரை முதலில் வணங்க வேண்டும்.

சைவ சமயத்தின் முதல் குருநாதரே நந்தீஸ்வரர் தான். எனவே அவரின் அனுமதி பெற்ற பிறகு ஆலயத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். நந்தீஸ்வரர் சுவாமியின் காதில் பேசுவதோ, வேண்டுதல்களை கூறுவதோ அவசியம் இல்லை. அனைத்து கடவுளையும் எவ்வாறு வணங்குவோமோ அவ்வாறே அவரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு தான் சிவபெருமானை வழிபாடு செய்ய செல்ல வேண்டும்.

எந்த கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினாலும் கண்ணை மூடிக்கொண்டு வேண்டுதல்களை கூறக்கூடாது. நமது கண்களை திறந்து, கடவுளைப் பார்த்தபடி நமது வேண்டுதல்களை கேட்க வேண்டும். சுவாமியை வணங்கும் பொழுது நாம் முதலில் நெஞ்சிற்கு நேராக இரண்டு கைகளையும் கூப்பி வணங்குவோம். அதற்கு பிறகு தீப ஆராதனை காட்டும் பொழுது நமது தலைக்கு மேலே இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சுவாமியை வணங்க வேண்டும்.

இவர்தான் சிவன் ஆலயத்திற்கு என்ன பொருட்கள் வருகிறது என்ன பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கணக்கினை எழுதுபவர். எனவே அவரை வணங்கும் பொழுது சிவனின் கருணையைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று வணங்க வேண்டும். அதன் பிறகு தான் நவகிரகங்களை வணங்க வேண்டும். இறுதியாக கோவிலில் கொடி மரம் என்று இருக்கும் அதன் அடியில் விழுந்து கும்பிட்டு வரவேண்டும்.