BJP TVK: தமிழக அரசியலில் அண்மைய காலமாக பல்வேறு முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றியுள்ளது. இக்கட்சியின் பிரச்சாரத்தில் 41 உயிரிழப்புகள் நிகழ்ந்த போது விஜய் கொள்கை எதிரி என்று கூறிய பாஜக தானாக முன் வந்து விஜய்க்கு உதவியது, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
இது மட்டுமல்லாமல் 3 தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவுடன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வந்த செங்கோட்டையன் சேர்ந்து பயணித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்பது கட்சியின் விதி. இதனை மீறியதற்காக செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கபட்டார்.
இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் சமயத்தில், இவர்கள் கூட்டணியின் பின்புலத்தில், பாஜக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று கூறியதாக தவெக வட்டாரங்கள் கூறி வந்தன. இதனால் பாஜக ஒரு சதி திட்டம் தீட்டி இருக்கிறது.
டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் நால்வருடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இவர்களை ஒரு அணியாக சேர சொல்லி, இவர்களுடன் விஜய்யை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாஜக நினைத்தது போல நால்வர் அணியுடன் விஜய் இணைந்து விட்டால் தேர்தலுக்கு பின் விஜய்யை பாஜகவுடன் சேர்த்து விடலாம் என்ற புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், இது குறித்து விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

