TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026 தேர்தல் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களை சந்திப்பை தீவிரப்படுத்திய விஜய்க்கு, கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் கருப்பு தினமாக மாறியுள்ளது என்பதே உண்மை.
கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு தவெகவின் அறியாமை தான் காரணம் என்று திமுக கூற, திமுகவின் சதித்திட்டம் தான் காரணம் என்று தவெக கூறி வந்தது. இந்த நிகழ்வில் விஜய் மீது தவறு இருந்தாலும் கூட மக்களின் ஆதரவு விஜய் பக்கமே இருந்தது. மாறாக திமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டது. அதிமுக, அமமுக, நாதக, பாஜக போன்ற அனைத்து கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.
இவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆகவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விஜய்க்கு எதிராக பேசாதது காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஒரு கருத்தை கூறியுள்ளார். தவெக சார்பில், கிறிஸ்தவ விழா கொண்டாடப்பட்டது.
அதில் பேசிய ஆதவ், கரூர் துயரம் நிகழ்ந்த போது, எங்கள் தலைவர் விஜய்க்கு முதல் போன் கால் ராகுல் காந்தியிடம் இருந்து தான் வந்தது. அப்போது அவர், brother, I am always with you , don’t worry என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்து விட்டதாக கூறிய அவர், இதனால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். கரூர் சம்பவத்தின் போது, விஜய், ராகுல் இடையே போன் கால் பேசப்பட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. மேலும் தவெகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸை பற்றி பேசுவது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.