ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை, அனைவரும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் இருக்கையில் அமர வேண்டுமென போராடி வருகிறார். திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய அவர், தற்போது வரை அந்த நிலையிலிருந்து பின்வாங்காமல் உள்ளார். விஜய்க்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து நிலவி வந்தது.
அதனை நசுக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் செங்கோட்டையன் சேர்க்கை. இவர் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு மிகப்பெரிய பலத்தை கூட்டியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய முகங்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் சபதம் எடுக்க அதற்கான பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அமைச்சர்களிடமும் போனில் பேசி வரும் செங்கோட்டையன் அடுத்ததாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜே.சி.டி பிரபாகரனை கட்சியில் சேர்க்க முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கூறி வருவதால் தவெகவில் சேர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜே.சி.டி பிரபாகரனின் கருத்தும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவரிடம், 2026 தேர்தலில் விஜய் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தவெகவிற்கு ஆதரவானதாகவே பார்க்கப்படுகிறது.

