TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இறந்த பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்றே சொல்லலாம். இம்முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போராடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தலைமை பதவியே ஆபத்தாக அமைந்து விடும் என்று பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு கட்சியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்த நாளே விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். மேலும் அதிமுகவின் முக்கிய முகங்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான வெளிப்பாடுகளை செய்து வரும் செங்கோட்டையன் அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிலும் முக்கியமாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டல எம்எல்ஏ-க்களை குறி வைத்த செங்கோட்டையன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணனை தவெக வலையில் வீழ்த்தியுள்ளார்.
இன்று பல்பாக்கி கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ் அவரை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவில் பணியாற்றி வந்த இவர் 1989 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் இவர், தவெகவில் இணைந்தது இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கொங்கு மண்டல தலைகளை குறி வைத்து வரும் செங்கோட்டையனால், அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.