கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

Photo of author

By Hasini

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையடுத்து தேன்மொழி முத்துக் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று குழந்தையுடன் தங்கியுள்ளார். அப்போது அந்த பெண் சிசு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டது. அதிலும் பாம்பு கடித்து இறந்ததாக கூறி குடும்பத்தினர் சிசுவை மோட்டுப்பட்டிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று மோட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று அடக்கம் செய்யப்பட்ட அந்த பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையும் நடத்தினார்கள். மேலும் இதுதொடர்பாக போலீசார் தேன்மொழியின் தாயாரான உமா என்பவரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெண் சிசுவுக்கு எருக்கம் பாலை ஊற்றிக் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேன்மொழியின் உமாவை நேற்று தர்மபுரி போலீசார் கைது செய்தனர். மூன்றாவதாகப் பிறந்த பெண் சிசுவை அந்த குழந்தையின் பாட்டியே எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.