நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும்.
இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைத்திருந்தால் தான், நமது வருங்கால சன்னதியினருக்கு நமது முன்னோர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைக்கும்.
நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோரின் புகைப்படத்தை நமது பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும் இந்த புகைப்படங்கள் உதவும். நம்மை பெற்று வளர்த்த நமது தாய் தந்தையரின் புகைப்படத்தை, கடவுளுக்கு நிகராக கருதினாலும் கூட, இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது.
ஏனென்றால் நமது தாய் தந்தையர் நமக்கு கடவுளாக இருந்தாலும் கூட, அவர்களும் ஒரு மனிதர்கள் தான். மனிதர்கள் என்றாலே ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அல்லது ஏதேனும் ஒரு நேரத்தில் தீய குணங்களுக்கு ஆட்பட்டு இருப்பார்கள். எனவே தான் இறந்த மனிதர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது.
அனைத்தையும் துறந்த தெய்வ நிலையில் உள்ளவர்களின் புகைப்படத்தை மட்டுமே பூஜை அறையில் வைக்க வேண்டும். அதேபோன்று படுக்கையறையிலும் வைக்கக் கூடாது. வீட்டில் உள்ள சமையல் அறை மற்றும் ஹாலில் இறந்தவர்களின் புகைப்படத்தை தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.
இறந்தவர்களின் புகைப்படத்தை வழிபடுவதற்கு என தனியாக ஒரு விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் பயன்படுத்தக்கூடிய விளக்கை இதற்கு பயன்படுத்தக் கூடாது. அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு இது போன்ற எந்த வகை விளக்கானாலும், ஒரு தனி விளக்காக வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்டுவது என்பது மிக முக்கியமான பழக்கவழக்கங்களில் ஒன்று. அதேபோன்றுதான் நமது இறந்த முன்னோர்களின் புகைப்படத்திற்கும் தினமும் பூ வைத்து,விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.
கடவுளுக்கு தினமும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைப்பது போன்று, நமது முன்னோருக்கும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் என்பதும் தினமும் வைக்க வேண்டும். அமாவாசை நாட்களில் அந்தப் படத்தை ஒரு மனையில் வைத்து, இலை போட்டு படையல் வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம்.
இறந்தவர்களின் புகைப்படத்திற்கு ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி போன்ற அனைத்தையும் காட்டி வழிபாடு செய்யலாம். அதேபோன்று இறந்தவர்களின் பார்வை தெற்கு பார்த்தவாறு இருக்கும்படி அவர்களின் புகைப்படத்தை நமது வீடுகளில் மாட்ட வேண்டும்.
அதாவது நமது வீட்டில் வடக்கு பக்கமாக இருக்கக்கூடிய சுவற்றில் இறந்தவர்களின் படத்தை மாட்டினால், அந்தப் புகைப்படம் தெற்கு பார்த்தவாறு அமையும். இந்த திசை தான் இறந்தவர்களின் படத்தை மாட்டுவதற்கு சரியான மற்றும் உகந்த திசையும் ஆகும்.
இந்த திசையில் இறந்தவர்களின் புகைப்படத்தை மாட்டினால், அந்த குடும்பத்திற்கு தேவையான வளர்ச்சியை கொடுக்கும்.