அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
திருவள்ளூர் மாவட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிதாக இரண்டு கோடியே 84 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்கு ஊராட்சியில், கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார்.
43 வயதான இவர் நேற்றும், எப்பொழுதும் போலவே வேலையில் ஈடுபட்டிருந்தார். இவருடன் சேர்ந்து சுமார் 10க்கும் மேற்பட்டோர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டாவது மாடிக்கு ஏறி சென்றுகொண்டிருந்தார் குமாரி. அப்போது எதிர்பாராத விதமாக, அவரது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் பணியாற்றுபவர்கள் உடனடியாக அவரை மீட்டு பெரிய பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் படுகாயமடைந்த குமாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பலியான குமாரியின் கணவர் முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கட்டிட வேலை செய்து தன் இரண்டு மகள்களை குமாரி பார்த்துக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. சும்தரா என்ற 15 மகளும், 13 சுஜித்ரா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், இப்போது தாய் தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்று நிற்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.