
TVK: அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது தவெக, நாதக-வையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிறது. விஜய் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதால் அவர் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில் தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இந்நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்ற கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் பலரும் விஜய்யுடன் கைகோர்த்து வருகின்றனர்.
இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் அமைந்த சம்பவம் தான் செங்கோட்டையன் சேர்க்கை. என்னை தொடர்ந்து இன்னும் பலர் தவெகவில் இணைய போகிறார்கள் என செங்கோட்டையன் கூறினார். இதனை தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை தவெக பக்கம் ஈர்ப்பதற்க்கான பணியை செங்கோட்டையன் கையிலெடுத்துள்ளார். தவெகவில் இணைந்த இவருக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
ஏற்கனவே 2 பதவிகளை வகித்து வரும் செங்கோட்டையனுக்கு மூன்றாவதாக ஒரு பதவியை ஒதுக்க விஜய் முடிவெடுத்துள்ளாராம். வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையனுக்கு தவெகவின் துணை முதல்வர் பதவியை அறிவிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்த படாத நிலையில் இது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஈரோடு செங்கோட்டையனின் கோட்டை என்பதால், இந்த இடத்தில் இதனை அறிவிப்பது தான் சரியாக இருக்கும் என்று விஜய் நினைக்கிறாராம்.
