ரயில்வேயில் மீண்டும் இதை செயல்படுத்த வேண்டும்! நிதி அமைச்சகம் சொன்ன அறிவிப்பு!
ரயில்வேயில் தற்போது பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 1927ஆம் ஆண்டு ரயில்வேயில் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு இது திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த 94 ஆண்டுகால பழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரயில்வேக்கு மத்திய நிதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது.
மேலும் ரயில்வே துறையை சீரமைப்பது தொடர்பான அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ரயில்வேயில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி கண்டிப்பாக தேவை. பொதுவாக கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்து தயார்படுத்துவது மிகவும் சிக்கலாக உள்ளது.
எனவே பழைய முறைப்படி பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் பல திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு ரயில்வே துறைக்கு ஏற்ப அவர்களை மாற்ற முடியும். இதே போல் ரயில்வேயில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்.ரெயில்டெல், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அமைப்புகளையும் இணைக்க வேண்டும் என்றும், ரயில்வே சார்பில் நடத்தப் பட்ட பள்ளிகள் மருத்துவமனைகள் நடத்துவதையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.