ADMK: அதிமுகவின் மூத்த மற்றும் முன்னாள் அமைச்சராக அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இறந்த பிறகு பல்வேறு பிரச்சனைகளும், பிரிவினைகளும் அதிமுகவில் தோன்றியது. அப்போது கூட அதிமுகவிலிருந்து பிரியாமல் கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இறப்பிற்கு பின் முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயர் அதிகம் பரிந்துரைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து இபிஎஸ் முதல்வராக்கபட்டார்.
ஆனால் இவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பும், மரியாதையும் குறைந்து வந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடைய ஆலோசனையும் கேட்காமல் இபிஎஸ் தனது முடிவை எடுத்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததில் கூட மூத்த தலைவர் ஜெயகுமாருக்கு உடன்பாடு இல்லை. இதனால் இவர் கட்சியின் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் ஒதுங்கியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் யாராக இருந்தாலும் யோசிக்காமல் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது பேசுபொருளாகியுள்ளது.
முதலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய அவர் தற்போது செங்கோட்டையனையும் நீக்கியிருப்பது கட்சியில் இபிஎஸ்யின் வலிமையை மென்மேலும் உயர்த்துவதாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவரின் இந்த செயல் 54 ஆண்டுகளாக கட்சியிலிருக்கும் செங்கோட்டையனை நீக்கினால் தான் யாராக இருந்தாலும் நீக்கி விடுவேன் என்று கூற முடியும் என்ற வாதத்திற்கு ஏற்றது போல் உள்ளது. அது மட்டுமல்லாமல், செங்கோட்டையனை அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது இபிஎஸ்யின் கெத்தை காட்டுவதற்காக என்றும் சிலர் கூறுகின்றனர்.

