ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!
தமிழகத்தில் முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பித்ததால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதில் ஒரு முக்கியமான அம்சமாக எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களின் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோரும் இ-பதிவு பெற்றுக்கொண்டு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரியலாம், சாலைகளில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட தொழிலில் ஈடுபட்டிருப்போர் நேற்று காலை முதலே இணையதள சேவை மூலம் இ-பதிவு மேற்கொண்டனர். பெரும் நிறுவனங்களும் தங்களது தொழில் சார்ந்த (காண்டிராக்ட்) அடிப்படையிலான ஊழியர்களுக்கு இ-பதிவு பெற்றுத்தர முனைப்பு காட்டின. இதனால் ஏராளமானோர் இ-பதிவு பெற தொடங்கினர்.
இப்படி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நேற்று ஒரே நேரத்தில் இ-பதிவு பெற முயற்சி செய்தனர். ஒரே நேரத்தில் இப்படி விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையசேவை திணறி போனது. இதனால் காலையில் இருந்து பல தடவை இ-பதிவு சேவை முடங்கியது. பிற்பகலிலும் இ-பதிவு சேவை முடங்கியது. மாலைக்கு பிறகு நிலைமை சரியானது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:
கொரோனா ஊரடங்கில் மக்கள் வசதியை முன்னிருத்தி, அவர்கள் ஒத்துழைப்பை கேட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வு ஏற்படுத்தும் நிலையில், அதிக அளவில் இ-பதிவுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வருகிறது.
பொதுவாக, நமது டேட்டா பேஸ் டிராபிக் என்பது, 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை விண்ணப்பங்களை பெறுவதாக உள்ளது.
கூடுதலாக, விண்ணப்பங்கள் வந்தால், 15 லட்சம் வரை வரலாம் என்று எதிர்பார்த்தோம். அப்படி வந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், நேற்று எதிர்பாராதவிதமாக 60 லட்சத்தையும் தாண்டி சென்று விட்டது.
இதனால், தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தனர். இதற்கான சர்வரின் கொள்ளளவை உயர்த்தி வருகிறோம். அதன்பின் எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் அவை ஏற்கப்படும்.
தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்தும்போது, அதைவிட 2 அல்லது 3 சதவீதம் கூடுதலான தாக்கம் இருப்பதாக எதிர்பார்ப்போம். ஆனால் இதில் 10 மடங்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.